வெள்ளி, 26 ஜூலை, 2019

மழையோடு நான்



தொடவும் மனமில்லை 
பிரியவும் மனமில்லை
தொடரவும் நேரமில்லை

காதலா? காமமா? புரியாமல்!
மழையோடு நான்.

தாரம் இல்லா இரவின் தாக மழை



மழைக்கு! ஏது?
கண்ணும்! காதும்!
இருந்திருந்தால் தினமும்
மின்னல் எடுத்த நிழற் படத்தில்!
இடி ஒலித்த பறையின் ஓசையில்!

மழையில்
வருகையின் வாடையில்
என்னவள் உடன் இல்லாமல்
நான் மட்டும் தனிமையில்
தவிக்கும் நிலை கண்டும்

மெல்லிய சாரலின்
தொடுதல் கூட,
ஊசியினை போல்
குத்தி காயப்படுத்துவது அறிந்தும்

வளிமண்ட வெப்பம் இறந்த பொழுதில்
என் உடலில் தணல் தனிந்து
குளிர்ந்த காற்றோடு
போரிட்டுக் கொண்டிருந்த
எந்தன் மூச்சுக் காற்றின் ஈரம் அறிந்தும்

என்னை துரத்துவதை நினைந்து
வருந்தி இறந்திருக்குமே - இல்லை
வானில் இருந்து பூமியினை நோக்கி
இறங்காமலாவது இருந்திருக்குமே

இப்படி இரக்கமற்று
அர்த்த ராத்திரியில்
தினந்தோறும் தொடர்ந்து வந்து
என் இதயத்தின் இயக்கத்தை
இம்சை செய்திருக்காதே.....!

வியாழன், 25 ஜூலை, 2019

ஆற்றல்



ஆற்றலின் 
அழிவின்மை விதியும்
காதலும் ஒன்றோ என்ற ஐயம்!

தன் நிலையினை 
இழந்த பின்னும் - ஏன்?
இறந்த பின்னும்

இரண்டும்
எங்கோ? ஏதோ? 
ஒரு விதத்தில் 
உயிரோடு உலவிக் 
கொண்டிருக்கின்றதே....!

இராட்சசிகள்






பெண்ணுக்கான
ஆணின் தியாகத்தில்
இயற்கையின் முழு சொத்துக்களும்
அபகரிக்கப்பட்டுவிட்டன,

பெண்பால் இல்லா
கவிதைகளும் இல்லை
பெண் புகழ் இல்லா
இயற்கை வர்ணனையும் இல்லை.

அன்பும் வீரமும் மட்டுமே
ஆணின் கல்வெட்டுகளாய்
ஆழப்புதைத்து வைத்து வேடிக்கை பார்க்கும்
#இராட்சசிகள் நிறைந்த பிரபஞ்சம் இது.

புதன், 24 ஜூலை, 2019

காக்கை குருவி எங்கள் சாதி







சாதி மத இன
பற்று என்ற போர்வைக்குள்ளே
பரவி இருந்த விசம் அருந்தி
வீழ்ந்து விடாமல்
கடந்து வந்த அனுபவங்கள்.

அவை யாவும்
மனிதனை மனிதன்
ஒடுக்கவும் ஒதுக்கவும்
உயர்வு தாழ்வை விதைக்கவும் செய்கிறது என்ற
உண்மையை ஏற்பார்கள்

அதை கடந்து வந்து
உயிரை நேசிக்கும் பாதையை
ஒரு போதும் பின் தொடர மாட்டார்கள்.

பிறக்கும் போது
பெற்றோர் இரத்தமே மாறித்தான்
குழந்தை பிறக்கிறது.

இருந்தும்
வளர்ந்த மிருகங்களாய் 
வலம் வருவதை
மாற்ற மட்டும் ஏனோ 

மனம் இருப்பதில்லை.

நாஆர்த்திகன்




என் வாழ்க்கை
என் கையில் என்று 
சொல்லிக் கொண்டே
சென்றார் அத்திவரதரை தேடி.....

புத்தி





கோவிலுக்குள் ஆராதிப்பவர்
பக்தர் ஆனார்
கோவில் ஏன் என்று ஆராய்ந்தவர்
புத்தர் ஆனார்


செவ்வாய், 23 ஜூலை, 2019

யார் பக்தன்







பஞ்ச பூதம் 
எல்லோருக்கும் ஒன்றாக இருக்க,
படைத்தவன் மட்டும் 
பலவாறாக இருப்பதை அறியாதவன் பக்தனா???

உடல் முழுதும் 
பரவசம் ஊட்ட பாய்ந்து கொண்டுள்ள
மூச்சுக் காற்றின் 
உள் முகம் அறிந்தவன் பக்தனா????

திங்கள், 22 ஜூலை, 2019

இருள் சூழ் மேக குளிர்




பைத்தியம் ஆக்கும் 
இவளின் இருள் சூழ்ந்த 
குளிர்பகலின் கவர்ச்சி வனப்புக்கு 
ஏது போட்டி???

இருள்_சூழ்_மேக_குளிர்
(மழை ஓய்ந்த மந்தமான மானத்தின் குளிரின் ஏழில்)

வெள்ளி, 19 ஜூலை, 2019

நடுநிசி



அது ஓர்
நிர்வாணமற்ற அந்தரங்கமான இரவு.

இறப்பின் பாதியில்
சுழன்று கொண்டிருந்த இரவில்,
வாழ்வின் மூலத்தின் விதை தேடி
தொலைந்த ஒரு நடுநிசி பயணம்.

வேலிகளே இல்லா வயல்வெளியில்
என் வியர்வை நாற்றத்திற்க்கு
செடிகள் வாசணை திரவியம் வழங்க
ஊர்வலமாய்  உலாவிய இரவு.

எதையோ ஓயாமல் தேடும் தென்றல்
அவ்வபோது எனக்குள்ளும் தேடிச்சென்ற இரவு.

எப்போதும் போல
போராட்டம் எனக்கும் எனக்கும்,
அதற்கிடையில் வந்தது
என்னைப் போலவே 
அலைந்து கொண்டிருந்த - ஆனால்
பசுமையான கிளைகளோடும்,
அசைக்க முடியாத வேர்களோடும்,
என் போதி மரம்

என் கண்ணோட்டம் முடித்த போது
அருகே இருந்த மணலோடு மயக்கம் கொண்டேன்,
அங்கேயே அமர்ந்து ஆராய எண்ணம் எழுந்தது
அப்படியே பிரபஞ்சத்தோடு கலந்துவிட
ஒரு தீரா தாகம் திடீரென்று பிறந்தது.

குழாயில் இருந்து கொட்டும்
இரைச்சலுக்கு நடுவில்,
என் காலடியில்
இசைபாடி செல்லும் நீர்,
திசைதெரிந்து அது ஓடிய வேளையில்,
என் வாழ்வின் திசை தேடிய நான்,
திகைப்பில் அமைதியாய்
அமரர் போல் அமர்ந்த நிலையில்.

நிறைய தூரம் 
கடந்த வந்த களைப்பினால் அல்ல,
நடுநிசியில் என் வாழ்வோடு
கடந்து வந்த காட்சிகளுடனான நீட்சியால்....

தெருவில் முனையில்,
உலகமே இருண்ட பின்னும்
அப்போதுதான் விடிந்தது போல்
விளையாடி திரிந்துவிட்டு,
விதிகளை மீறமுடியாது
காதலியை வீட்டுக்கு அனுப்ப
காத்திருக்கும் சோகத்தில் பகிரும்
பிரிவின் முத்ததின் சுவடுகளோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

பசியையும் பாராது,
வாழ்வின் ஓட்டத்தை தொடர
ஓடாய் உழைத்த மயக்கத்தில்,
தெருவோர கடை மூடும் நேரத்தில்,
இருளோடு உண்ணும் அந்த கணத்தில்
நானும் அவர்களின் விருந்தோம்பலில்
கலந்து விட்டு கடை சாத்திய இருளோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

நகரின் சாலையோரம்,
சூரியனோடு எழுந்து
உழைத்த களைப்பில்
தூக்கத்தின் உச்சத்தில்
உருளும் ஒரு பகுதியும்,
நிலவோடு விழிக்கும் விலை மாதர்களாம்,
துக்கம் தீர்க்க சிக்கனமான உடைகளோடு
தெருக்களின் காவலாளிகளால் சூழ்ந்த ஒரு பகுதியும்,
இவ்வாறு ஒவ்வோர் இரவும் கரைந்து கொண்டிருக்கும்
ஒழுங்கான நெறிமுறைகளை கண்டும் காணமலும்
கடந்த சென்ற இரவின் நிழல்களோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

பேருந்து நிறுத்தங்கள் தோறும் நிற்கும்
தேனீர் சமோசா இருசக்கர வண்டியும் - அதை தேடி
தேனிக்கள் போலே உலவும்
இயற்கையின் விதிமுறை மீறிய பிண்டங்கள்,
இரைதேடி கூடு சேர்ந்ததை போல் மொய்த்து கொண்டிருக்க
நானும் சற்று அவர்களோடு சங்கமித்த சாட்சிகளோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

கணவனின் கடமையை
தந்தையின் கடமையை
உடன்பிறந்த கடமையை
உயிர்கொண்ட கடமையை
கண்மூடாது கண்விழித்து
தெருவோரம் வண்டியில் படுத்தும் உறங்காமல்
ஆரவாரமாக அவசர அவசரமாக அழைக்கும்
அழைப்புகளுக்காக காத்திருக்கும் விழிகள்,
கைபேசியோடு விளையாடிக் கொண்டே
இருக்கையில் அமர்ந்து இன்புற்று இருக்கும் 
ஓட்டுநரோடு உறவாடிய பொழுதுகளின் எச்சத்தோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

எரிபொருள் தீர்ந்த எந்திரமாய் செயல் இழந்து
சிலைபோல் சிங்காரமாய் சிந்தனை மறந்து
என்னையும் மறந்து இருசக்கரவாகன மெத்தையில்
மெத்தனமாக செய்த சின்னதொரு தவத்தினுடே
தெருவோர நாய்களின் நாயகனான நினைவோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

சிந்தித்து கொண்டே சில நாட்கள்
சிரித்துக் கொண்டே சில நாட்கள்
சிந்தனை அற்று சில நாட்கள்
சிக்கலோடும் தீர்வோடும் மாறி மாறி சில நாட்கள்
என கடந்து வரும் பாதையை பதிவில் ஏற்றாத நிலையில்
இருசக்கர வண்டியில் கோலமிட்டு கொய்த  காயங்களோடு
விழிப்பதா உறங்குவதா என்ற போராட்டத்திற்கு நடுவே
விழிமூடிய பல இரவுகளின் நீட்சியோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

புத்தகத்தோடு பூங்காவில்
என்னுள் புதுமைகளை விதைக்கும் வேளையில்
பூதத்தை பார்பதைபோலும் புத்தி மாறியவன் போலும்
என்மீது பார்வையை வீசி இரவு நேர விசில் ஊதிச்செல்லும் கூடியிருப்பின் காவலாளியின் சத்ததோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

காவல்துறை கட்டுபாட்டால்,
விளக்குகள் அணைத்து எடுக்கும் கற்பழிப்பு காட்சிகள் போல அவ்வப்போது விளக்குகள் மின்னல் போல் ஒளிக்க
திரைகளும் திரைக்கதைகளும் இல்லாமலே
சினிமா காட்சிகள் போல் ஓடும்
இரவு நேர பெட்டிக்கடை தேநீரோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

காதல் மொழிகள் படைக்கும் நாழி உதித்த வேளையில்
கண்ணில் நேரம் மட்டுமே காட்டும் கடிகாரத்தையும்
ஊர் அடங்கிய சாலையில் பல்சரோடும்
காற்றுக்கு அறுவை சிகிச்சை செய்ததின்
கண்ணீர் துளிகளோடு
தொழிற்சாலையின் தூரத்தை துரத்தி பிடிக்க
இரவு நேர பணிக்கான பயணத்தின் பொழுதுகளின்
அவசரமாக வாங்கி அடைத்தெடுத்து சென்ற
சீக்கன் ரைஸின் வாசங்களோடு
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

அடிக்கொரு முறை
பிரம்மன் படைத்த
நகரும் சிலைகளின்
காட்சிகள் அற்ற
சாலையின் ஓரங்கள்,
மாதுவில் இருந்து
துணைக்கால் நீங்கி
மது உண்டு உருளும்
மலைப்பாம்புகளின் காட்சியோடு,
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்.

சாலையோர தெய்வங்கள்
அடைக்கப்பட்ட தரிசனத்தோடும்
புத்தக சுமையோடும்
பெத்தவர்கள் சுவையோடும் போராடும்
குழந்தைகளின் சங்கீதமற்ற அற்ற தெருக்கலோடும்
நொடிக்கொரு முறை
வேகத்தடையாய் வேகம் குறைக்கும்
நெரிசலற்ற நிறுத்தம் துறந்த சாலையோடும்
இப்போதாவது எனக்கு ஓய்வு தந்தார்களே என்று
பெருமூச்சு விடும் சாலையின் சாந்தநிலை
கலைத்த குற்றத்தோடும்
எப்போதும் என்னை
தனியே விட தவித்து
என்னுடனையே பயணிக்கும்
அழகின் அமுத ஊற்றான நிலவோடும்
எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்ற வினாவோடும்
எதற்காக இயங்கி கொண்டிருக்கிறேன் என்ற குழப்பத்தோடும்
எந்தன் பிறப்பின் நோக்கம் உண்டா என்ற ஐயத்தோடும்
நான் மட்டும் வாழ்ந்த இரவின் நினைவில்......

நான் அமர்ந்திருந்த
நடுநிசி பொழுதில்
தான் நிகழ்ந்தது
அந்த புத்த தரிசனம்
எல்லையற்ற உலகில்
ஏதுமற்ற வாழ்வின்
அர்த்தம் என்னவென்று
உணர்ந்து தெளிந்தேன்

அடையாளமற்ற
அண்டத்தில்
என் பிண்டம் ஏன் என்று
அப்போது தான் 
உணர்ந்து தெளிந்தேன்

கொடுப்பதற்கு
என்ன உண்டு என்பதையும்
படைப்பதற்கு
என்ன வேண்டும் என்பதையும்
அப்போது தான்
உணர்ந்து தெளிந்தேன்
அடையாளமற்ற
உடலும் மனதும்
ஆன்மாவோடு தொலைந்த
இடத்தை சேர்ந்தது
மயக்கமும் தெளிந்தது
இரவும் விடிந்தது
பிறந்தது புதியபாதை
புதியதோர் பரிமாணத்தில்.
தொடர் கதையாய்
நீள்கிறது நடுநிசியின்
கூடல் இன்றும் நிற்காமல்
அறைகள் அற்ற அந்தரங்கமாய்...........!!!

வியாழன், 18 ஜூலை, 2019

காமம்






இருபால் சார்ந்தது மட்டுமல்ல காமம்
உள் உணர்வின் உச்சமே காமம்

காமம்
உடல் மட்டும் சார்ந்தது இல்லை என்பதை
காகித வரிகளோடு வாழும்
வாசகர்களின் கலவி காட்டும்

இவையாவும் போதை என்ற வார்த்தையின் உள்ளே
புதையலாய் புதைந்து கிடக்க

தெய்வீக காமம்
தேகத்துடன் மட்டுமே
தெருக்கள் தோறும்
தேர் ஓட்டம் போல்
வடம் இழுத்துக் கொண்டாடப்படும்
வழக்கமானது மனித வாழ்வில் காமம்.

✍கவிவாசகன் கண்ணன்

Reference : காமத்திலிருந்து கடவுளுக்கு - ஓசோ

செவ்வாய், 16 ஜூலை, 2019

நாணம்





சாலையில் நடந்து சென்றால்
சிலைகள் யாவும்  நாணம் கொண்டு தலை குணிந்தன
சிற்பியின் மீது கடுங்கோபத்தோடே....!!!

ஞாயிறு, 14 ஜூலை, 2019

இருள் மருந்து



இருண்ட நீள இரவுகளையும்
காத்திருந்து காதல் கொள்கிறேன்!
இருள் விலக்கும் கதிராய் 
அதிகாலையில் நீயும் நானும் 
உலவும் கூடலுக்காய்!!! 💛